Saturday, June 13, 2015

'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது'


கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், பயாலாஜி தேர்வில் வினாத்தாள் மிக கடினமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால், நன்கு படித்த மாணவ, மாணவியரும் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுயநிதி பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பிளஸ் 1 சேர்க்கையை பொறுத்தவரை, கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய தேர்வு செய்வதில், மாணவர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம். ஏனெனில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த பிரிவையும் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். இதனால், இந்த பிரிவில் சேர, அதிக போட்டியும் இருந்து வந்தது.
நடப்பு கல்வியாண்டில்:ஆனால், கடந்த ஆண்டு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், கடந்த ஆண்டை விட, நடப்பு கல்வியாண்டில், மேத்ஸ், பயாலஜி அடங்கிய முதல் பிரிவில் சேர்வதற்கான ஆர்வம், மாணவ, மாணவியரிடையே கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:மேல்நிலைக்கல்வியில், உயிரியல் பிரிவில், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய இரு பாடங்கள் உள்ளன. இதில் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரை, 75 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவதாக இருந்தாலும், 150 மதிப்பெண் அளவுக்கு பாடம் அதிக அளவில் உள்ளது.அதாவது பியூர் சயின்ஸ் குரூப்பில் உள்ள விலங்கியல் தேர்வுக்கு, 150 மதிப்பெண்களுக்கு, 8 பாடம் படிக்க வேண்டும் என்றால், 'உயிர்-விலங்கியல்' தேர்வுக்கு, 75 மதிப்பெண்களுக்கு, 7 பாடங்கள் படிக்க வேண்டும்.
இதனால், சராசரியாக இருக்கும் மாணவர்களிடையே தடுமாற்றம் ஏற்படுகிறது.நான்கு பாடங்களிலும், 'சென்டம்' எடுக்க முடியும் என்ற மாணவர்களுக்கு, முதல் குரூப் எடுப்பதில், எவ்வித சிரமமும் இருப்பதில்லை. சராசரி மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களும், 'உயிரியல்' எடுத்து ஏன் கஷ்டப்படுகிறீர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு அதிக உழைப்பு தேவையில்லை' என, திசை திருப்பிவிடுகின்றனர்.
சிறந்த சாய்ஸ்:இதனால், சராசரியாக படிக்கும் மாணவர், இன்ஜினியரிங் செல்ல வேண்டும் என, ஆசைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அடங்கிய குரூப் சிறந்த சாய்ஸாக உள்ளது. எம்.பி.பி.எஸ்., கிடைக்காவிட்டாலும், நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவத்துறை தான், என்னுடைய சாய்ஸ் எனக்கூறும் மாணவர்களுக்கு, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் அடங்கிய பியூர் சயின்ஸ் குரூப்
கைக்கொடுக்கும்.
ஊரக பகுதிகளில், பியூர் சயின்ஸ் குரூப்பில் சேர, அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நகர்ப்புறங்களில், கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, உயிரியல், கணிதம் அடங்கிய குரூப்பில் சேர, ஆர்வம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, May 23, 2015

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்


பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. வெறும் 124 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர். உயிரியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இந்த விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதிக்கப்படும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அடுத்த வாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களே விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகிய முடிவுகள் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறு கூட்டல், மறு மதிப்பெண்ணுக்குப் பிறகு மதிப்பெண்ணில் மாறுதல் இருந்தால் அவை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத் தக்கதாக இருக்கும் என்பதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் சற்றுத் தாமதமாக வழங்கப்படுகிறது.

Friday, May 15, 2015

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்


பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச் சான்றிதழும் நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. தற்காலிக சான்றிதழில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தேர்வுப் பதிவு எண், பயிற்று மொழி, பள்ளியின் பெயர், பாடப்பிரிவின் பெயர், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் தனித்தனி மதிப்பெண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சான்றிதழ் எண் பதிவிட வேண்டிய இடத்தில், 'டி.எம்.ஆர்., கோட்' எனப்படும், மதிப்பெண் பதிவேடு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ் மூலம், சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வேலைவாய்ப்பு பதிவுக்கு சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை பதிவு செய்யும் போதோ அல்லது அவரது படிப்பை, 'அப்டேட்' செய்யும்போதோ, மதிப்பெண் சான்றிதழ் எண்ணை, 'ஆன் - லைனில்' கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், 'டி.எம்.ஆர்., கோட்' எண் மட்டுமே உள்ளது; சான்றிதழ் எண் இல்லை. அதனால், அசல் மதிப்பெண் சான்றிதழ் எண் வந்த பின், வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும், என்றார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்


பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.8.8 லட்சம் மாணவர்கள்:
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டனர்.இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு, முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன்படி, அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மே 14-ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு,தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வரும் நாள்களிலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் எப்போது?
நடப்பாண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.எனினும், பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் கிடைத்த பிறகு, அனைத்து மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்! : புதியதிட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்பு


பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, மாநில அளவில் தற்காலிகமதிப்பெண் சான்றிதழ், பள்ளிகள் வாயிலாக, நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. முதன்முறை செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், உயர்கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், மாணவர்கள் கல்லுாரிகள் தேர்வு செய்வதில் எவ்வித சிக்கல்களும்,தாமதமும் எழாத வகையில், முதல் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில், காலை, 9:30 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி நடந்தது. இத்துடன், மாணவர்களின், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களையும் வழங்க அரசுத்தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் முறையாக வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், மாணவரின் புகைப்படம், மதிப்பெண் விபரம், பயிற்று மொழி, பிறந்த தேதி, பதிவு எண், பாட தொகுப்பு எண்,பள்ளியின் பெயர், தேர்வு முடிவுகள் வெளியானது முதல் எத்தனை நாட்கள் செல்லும் என்ற விபரங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன.மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், உடனடியாக தலைமையாசிரியரே பிழைகளில் திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு வழங்கவும், அப்பிழைகள் குறித்து அரசு தேர்வுத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அசல் மதிப்பெண் பட்டியலில், 100 சதவீத பிழைகள் தவிர்க்கப்படும்.அரசு பள்ளி தலைமையாசிரியை சந்திரசேகர் கூறுகையில்,''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திட்டம் நல்ல முயற்சி. உயர்கல்வியில் மாணவர்கள் எவ்வித தாமதமும்இல்லாமல் சேரலாம். அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Saturday, May 9, 2015

பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது

.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

Wednesday, May 6, 2015

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.தேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில்தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு ஒரு அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.