Thursday, May 25, 2017

’கிரேஸ் மார்க்’ பிரச்னையால் சி.பி.எஸ்.இ., ’ரிசல்ட்’ நிறுத்தம்

’கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது’ என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், கணிதம் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டும், கடினமாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவர்கள் இருந்தனர். 

ஆனால், கணிதம் எளிதாகவும், விலங்கியல் கடினமாகவும் இருந்தது. எனவே, விலங்கியல் வினாத்தாளை ஆய்வு செய்து, ’கிரேஸ் மார்க்’ எனப்படும் கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது.ஆனால், கிரேஸ் மதிப்பெண், போனஸ் மதிப்பெண் போன்ற முறைகளை கையாளக் கூடாது என, மத்திய மனிதவள அமைச்சகம், ஏப்., 27ல் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றம் உத்தரவு : இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிடுவதற்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் முடிவு செய்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, டில்லி உயர் நீதிமன்றம், கிரேஸ் மதிப்பெண் தொடர்பாக, ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது

தேர்வு அறிவித்து, அதன் நடைமுறைகளை மாணவர்களுக்கு தெரிவித்த பின், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. கிரேஸ் மார்க் இருப்பதால், மாணவர்கள் பலர், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி, வெளிநாட்டு பல்கலைகளில், உயர் படிப்புக்கு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 

நிதி நெருக்கடி

தற்போது, திடீரென மதிப்பெண் முறையில் மாற்றம் செய்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடியும் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மதிப்பெண் கொள்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து, வாரிய உறுப்பினர்கள் கூடி முடிவு செய்த பின், மதிப்பெண் மாற்றுவதா அல்லது ஏற்கனவே தயாரான மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதா என, முடிவு செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment