Sunday, November 13, 2016

எழுதி பார்த்தால் நல்ல மதிப்பெண்! பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ’தினமலர்’ ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கார்த்திகா, தமிழ் வாய்விட்டு படிப்பதும், உடனுக்குடன் எழுதிபார்ப்பதும் எளிதான வெற்றியை தேடித்தரும்.
குறிப்பாக தமிழில் எழுத்து, ஒற்று, சந்தி மற்றும் இலக்கண பிழை இல்லாமல் எழுத வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் தமிழில் பிழையுடனே எழுதுகின்றனர்.
இதனை பொதுத்தேர்வுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். செய்யுள் பாடல்களை அடிப்பிறழாமல் எழுத வேண்டும். மறுமலர்ச்சி பாடல்கள் எழுதும்போது, பெயர்க்காரணம், நுாற்க்குறிப்பு, ஆசிரியர்குறிப்பு போன்றவற்றினை எழுதினால் மட்டுமே முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும். திருக்குறள் பகுதியில் இருந்து, 22 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது.
பவுன், ஆங்கிலம்
புரிதலும், தொடர் பயிற்சியும் இருந்தால் ஆங்கிலத்தில் அனைவரும் எளிதல் வெற்றி பெறமுடியும். வினாக்களை நன்கு படித்து புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும். ஆங்கில திறமையை மேம்படுத்திக்கொள்ள, புத்தகத்தில் உள்ள புதிய சொற்களுக்கான அர்த்தங்களை அகராதியில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழுவாக இணைந்து, பேசிக்கொண்டு படிக்கும் போது எளிதாக இருக்கும். இலக்கண பிழையை குறைப்பதற்கு தொடர் பயிற்சியே சிறந்த வழிமுறையாகும்.
ரேணுகா தேவி, பொருளியல்
மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனம் எது என்பதை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். நெடுவினாக்களுக்கு, ஏதாவது நான்கு பாடங்களை தேர்ந்தெடுத்த முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும்.
கிராப் வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். தலைப்புகள், முக்கிய பகுதிகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். முதலில் வினாத்தாளை பெற்று நன்றாக வினாக்களை முழுமையாக படித்து விட்டு, பின்பு எது சுலபமாக உள்ளதோ, அந்த பகுதியிலிருந்து விடையளிக்கலாம். குறிப்புகள் எடுத்து அதனை விரிவாக்கம் செய்யும் அளவுக்கு பழக வேண்டும்.
பெரிய வினாக்களுக்கு, முன்னுரை, வரையறை, அட்டவணை, படங்கள், விரிவாக்கம் மற்றும் முடிவுரை என்று தலைப்பு இட்டு எழுத வேண்டும். நேரத்துக்குள் எழுதி முடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வித்யா, வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல்
எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் படித்தால் மனதில் ஆழமாக பதிந்து எந்த சூழ்நிலையிலும் மறக்காது. கணக்குபதிவியலில் முதல் தொகுதி மட்டும் படித்தாலே, 190 மதிப்பெண் உறுதியாக எடுக்கலாம்.
கணக்குகளை மீண்டும், மீண்டும் எழுதி பார்த்தால் மட்டுமே மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருக்க கூடாது.
லாபநட்ட கணக்குகள், நிலைமுதல் மாறுபாடுகள் போன்ற வினாக்கள் கட்டாயமாக கேட்கப்படும். தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல்; தைரியமாக இருந்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.
ஞானசேகரன், இயற்பியல்
சரியான திட்டமிடலும், அதனை தெளிவாக வெளிப்படுத்துதலும் இருந்தாலும் சுலபமான வெற்றியை பெறலாம்.
எந்தவொரு பகுதியும் புரியவில்லை என்றால் ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இயற்பியலில் முதல் தொகுதியை மட்டும் படித்தால், 115 மதிப்பெண்கள் பெறலாம். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தில் பின்னால் உள்ள வினாக்களை படித்தாலே குறைந்தபட்சம் 20 மதிப்பெண் எடுக்க முடியும்.
தேர்வின் போது நேரத்தை சரியாக வகுத்துக்கொள்ள வேண்டும். பிரிவு ’ஏ’க்கு அரை மணி நேரமும், பிரிவு ’பி’ மற்றும் ’சி’ க்கு முக்கால் மணி நேரமும் மற்றும் பிரிவு, ’டி’க்கு ஒரு மணி நேரமும் பிரித்துக்கொண்டு தேர்வினை எழுத வேண்டும். கணித வினாக்கள் எழுதும் போது, சமன்பாடு, பிரதியிடல் மற்றும் முடிவுகளை மட்டும் எழுதினால், 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். படம் வரையும் போது ’ஸ்கேல்’ பயன்படுத்தி வரைய வேண்டும்.
சுப்ரமணியன், வேதியியல்
பாடத்தின் கருத்தை தெளிவாக புரிந்து கொண்டால், அதிலிருந்து கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.
அனைத்து பிரிவுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். வரையறை, வேறுபாடுகள் மற்றும் பயன்கள் வினாக்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்து ஒரு வினா பொதுத்தேர்வில் கேட்கப்படுகிறது.
இதில் வரும் சமன்பாடுகளை கவனமாக படித்துக்கொள்ள வேண்டும். இதனை சரியாக எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். படிக்கும் போது சிந்தனை முழுவதும் படிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
சுந்தரம், கணிதம்
வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் என்பதுபோல் கணிதம் என்பதை கடினம் என ஒதுக்கக்கூடாது.
சூத்திரங்களை கண்டிப்பாக மனப்பாடம் செய்து கொண்டு, தவறில்லாமல் எழுத பழக வேண்டும். என்ன கொடுக்கப்பட்டுள்ளது; கேட்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். கணக்குகளை திரும்ப, திரும்ப போட்டு பார்த்தால் மட்டுமே மறக்காது.
40 ஒரு மதிப்பெண் வினாவில், 30 வினாக்கள் புத்தகத்தில் பின்பக்கத்தில் உள்ளதே வரும். தேற்றம், முடிவுகள் மற்றும் சூத்திரங்களை பாக்ஸ் போட்டு எழுத வேண்டும்.
அணிகளும், அணிக்கோவையின் பயன்பாடுகளும்; வெக்டர் இயற்கணிதம்; பகுமுறை வடிவ கணிதம்; தொகை நுண்கணித பயன்பாடுகள் மற்றும் கணிநிலை கணக்கியல் பாடங்களை படித்தால் நெடுவினாக்கள் முழுவதும் எழுதிவிடலாம்.
படம் வரைந்து எழுதினால்; படத்துக்கு தனி மதிப்பெண் வழங்கப்படும். முழுவதும் தெரியவில்லை என்றால்; தெரிந்த ஸ்டெப்ஸ் வரைக்கும் போடலாம், ஏனெனில் ஒவ்வொரு ’ஸ்டெப்ஸ்’க்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
ஜான்சி ஸ்டெல்லா மேரி, உயிரியல்
எந்தவித பதட்டமில்லாமலும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். நெடுவினாக்களுக்கு பத்தி பத்தியாக விடையளிக்காமல், தெளிவாக ’பாயின்ட்’ போட்டு எழுத வேண்டும்.
தாவரவியல் மற்றும் விலங்கியலில் வரும் பெயர்களை, குழப்பிக்கொள்ளால் நன்றாக மனப்பாடம் செய்து தவறில்லாமல் எழுத பழகிக்கொள்ள வேண்டும்.
தாவரவியலில் வரும் குடும்பங்களை முழுமையாக படித்தாலே இரண்டு 10 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.
பொதுத்தேர்வில் கேட்கப்படும் வினாவினை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். படங்கள் உள்ள வினாக்களை கட்டாயம் தேர்வு செய்து எழுத வேண்டும்.
படங்களை வரைந்து, வலது பக்கத்தில் தெளிவாக பாகங்களை குறித்தாலே முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும், வளவள என்று எழுதாமல், கேட்டதுக்கு மட்டும் பதில் அளித்தால் மட்டும் போதுமானதாகும்.
முக்கிய வரிகளை பாக்ஸ் போட்டு அல்லது அடிக்கோடிட்டு எழுதினால், மதிப்பெண்கள் வழங்குவதற்கு எளிதாக இருக்கும்.
நீத்து, கம்ப்யூட்டர் சயின்ஸ்
திட்டமிட்டு, நம்பிக்கையோடு படித்தால் அனைவரும் முழுமதிப்பெண் பெற முடியும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
ஏனெனில், 75 மதிப்பெண்கள் உண்டு. பில் கட்டளை, சார்புகள், இன் பொருள் சேர்த்தல், தரவுதலை வகைகள், குறிப்பு மூலம் சேர்த்தல், மதிப்பு மூலம் சேர்த்தலில் இருந்து மூன்று, 5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும்.
புரோகிராம் எழுதும்போது ஒவ்வொரு படிநிலையாக எழுத வேண்டும்.
புத்தகத்தில் உள்ள, 7 மடக்குகளையும் முழுமையாக படித்துக்கொண்டால், ஒரு 5 மதிப்பெண், ஒரு, 2 மதிப்பெண் மற்றும் நான்கு மதிப்பெண் வினாக் களுக்கு விடையளிக்க முடியும்.

No comments:

Post a Comment