Wednesday, December 21, 2016

கலைப்பாடங்களுக்கு வினாவங்கி இல்லை!

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி பின்னும், கலைப்பாட பிரிவுகளுக்கான, வினாவங்கி புத்தகம் வினியோகிக்காததால், மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பொதுத்தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினாவங்கி புத்தகம் அச்சிட்டு, வினியோகிப்பது வழக்கம். 

நடப்பாண்டில், நவம்பர் மாதம் முதல்வாரத்திலே, பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, வினாவங்கி புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், வினாவங்கி புத்தக விற்பனை நடக்கிறது. இதில், பிளஸ் 2, அறிவியல் பிரிவில், கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கு, ’கம்புக்’ என்ற, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான புத்தகங்கள் உள்ளன. இதை முழுமையாக படித்தால், சென்டம் பெறலாம் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், வணிகவியல், வணிக கணிதம், புள்ளியியல், வரலாறு பாடங்களுக்கும், கம்புக் தயாரித்து வினியோகிக்கப்படும். நடப்பாண்டில், கலைப்பாடங்களுக்கான வினாவங்கி புத்தக விற்பனை துவங்காததால், மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளதால், வினாவங்கி புத்தகம் விரைவில் வினியோகித்தால், பயிற்சி பெற உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுகுறித்து, வினாவங்கி நோடல் மைய அலுவலர்கள் கூறுகையில், ’கலைப்பாடங்களுக்கு வினாவங்கி வேண்டி, மாணவர்கள் அடிக்கடி வருகின்றனர். நோடல் மையத்தை தேடி வரும் மாணவர்களின், பள்ளி பெயர், தொடர்பு எண் பெற்றுள்ளோம். வினாவங்கி வந்ததும், தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment