’தமிழகத்தில், பொறியியல் கல்லூரிகளில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை தொடர அனுமதிக்க வேண்டும்’ என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியுள்ளதாவது: பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 2018 - 19ம் கல்வி ஆண்டில் இருந்து, தேசிய நுழைவுத் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., எனும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஊரக பகுதி மாணவர்களையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களையும், பெரிதும் பாதிக்கும்.
தேசிய பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றால், அதற்கு, சிறப்பு பயிற்சி பெற வேண்டும். ஏனெனில், தேசிய நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும், பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
மாநில அரசு, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும், முழுமையாக பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க, சில ஆண்டுகளாகும். அதுவரை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், பி.இ., - பி.டெக்., படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கப்படுவது தொடர வேண்டும். பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment