Monday, April 24, 2017

பிளஸ் 2 மதிப்பெண் கட்டாயம் : 'நீட்' தேர்வு குறித்து விளக்கம்

'எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வு தேர்ச்சியுடன், பிளஸ் 2 தேர்வில், 50 சதவீத மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், வரும் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, மே, 7ல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு மதிப்பெண் மட்டும் போதுமா; பிளஸ் 2 மதிப்பெண் தேவையா என, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, கோவை, குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர் நலச் சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்தில், தகவல் கேட்டிருந்தார்.
அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதில்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோ டெக்னாலஜி' மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியின மாணவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும், 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்கலாம். பொது பிரிவு மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீதம், மற்ற மாற்றுத் திறனாளிகள், 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பட்டியலில், இடம் பெற்றிருந்தால் மட்டுமே, மருத்துவம் படிக்கும் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment