Thursday, April 6, 2017

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை-கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகமெங்கும் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்த வழிகாட்டுதல் ஆலோசனை கருத்தரங்குகள் நடத்துவதன் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து,
அவர்களின் கல்வித்தரம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மேற்படிப்பு,வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசியது இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 1162 இடங்களில் 10 ஆம் வகுப்பு,பிளஸ்-2 பள்ளிக்கல்வி நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு,வேலை வாய்ப்பு சார்ந்த ஆலோசனை,வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளது.
இந்த கருத்தரங்குகள் மூலம் நகர்ப்புற, கிராமப்புற மாணவ,மாணவிகள் தங்கள் திறமை ஆர்வத்திற்கேற்ப உயர்படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆலோசனைகள் பெற முடியும்.
கருத்தரங்குகளில் பங்கேற்கும் மாணவ,மாணவியர்கள் விரும்பும் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் எங்கு அமைந்துள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டும் கையேடு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் வழிகாட்டும் கையேட்டில் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.வேலை வாய்ப்பு,திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
சென்னையில் வரும் 18,19 ஆகிய இரு நாள்கள் நடைபெறும். தமிழகமெங்கும் 152 நகராட்சிகள்,387 ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் வழிகாட்டுதல் பயிற்சி கருத்தரங்குகள் மூலம் 10 ஆம் வகுப்பு பயிலும்
சுமார் 10 லட்சம் மாணவர்களும்,பிளஸ்-2 பயிலும் சுமார் 10 லட்சம் மாணவர்களும் பயன் பெற உள்ளனர்.இந்த பயிற்சிக் கருத்தரங்குகள் நகர்ப்புற பள்ளி மாணவ,மாணவியர்களை விட, கிராமப்புற பள்ளி மாணவ,மாணவியர்கள் அதிக அளவில் பயன் பெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா,மாவட்டத்தில் 165 உயர்நிலைப்பள்ளிகளும்,168 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. நடப்பு ஆண்டில் 10 ஆம் வகுப்பில் 53,482 மாணவர்களும்,பிளஸ்-2 தேர்வில் 51,445 மாணவர்களும் தேர்வு எழுதி உள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment