தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில்,பிளஸ் 2 மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செங்கோடு அடுத்த, தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர் சதீஷ்குமார், கழிப்பிடத்தின் அவலநிலை குறித்து, டோல் ப்ரி எண்ணில் புகார் தெரிவித்ததால், கடந்த, 29ம் தேதி, பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். நேற்று, இம்ரான் என்ற மாணவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக, பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அப்பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை செய்தார். மேலும், கழிப்பிடம், தண்ணீர் வசதி குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுத்தார். மாணவ, மாணவியரிடம் வகுப்பறைகளுக்கு சென்று விசாரித்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளியின் நலன் காக்க, தலைமையாசிரியர் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து,மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்துள்ளார்.
இருப்பினும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் வருத்தம் தெரிவித்து, படிக்க விரும்பினால், வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment