பிளஸ் 2 தேர்வுகளில், பள்ளி மாணவர்கள் கணிசமான அளவு ஆப்சென்ட் ஆவதால், தேர்ச்சி விகிதத்துக்காக, தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வு எழுத தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, அனைத்து வகை பள்ளிகளும் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, 100 சதவீத தேர்ச்சி என்பது, அடுத்த ஆண்டு அட்மிஷனுக்காக அவசியமாகிறது.
அதேபோல், சில ஆண்டுகளாக, கூடுதல் தேர்ச்சி விகிதத்துக்காக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கெடுபிடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாக தேர்ச்சி விகிதம், தேர்வு எழுதியவர்களில், தேர்ச்சி பெற்றவர்களை வைத்து கணக்கிடப்படுகிறது.
இதனால், பல பள்ளிகளில் தேர்ச்சி பெற முடியாத நிலையில் உள்ள மாணவர்களை, தேர்வில் பங்கேற்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கேற்ப, தற்போது நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தனித்தேர்வர் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களும் கணிசமான அளவில் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில், தமிழ் முதல் தாளில், 321 பேர், தமிழ் இரண்டாம் தாளில், 296 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
பெற்றோர் கூறியதாவது
தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு பள்ளியாக இருந்தாலும், தேர்ச்சி விகிதத்துக்கு போராடுகின்றனர். அதில் குறுக்கு வழியை கடைபிடிக்கும் தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர். இதற்காக, பெற்றோரை அழைத்து பேசி, புகார் எழாதபடி பார்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:
பிளஸ் 2 கல்வியாண்டின் துவக்கத்தில், தேர்வர் பட்டியல் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, பின், மாணவர்கள் பெயர்களை நீக்க முடியாது. அதேபோல், ஹால் டிக்கெட்டுகளை, மாணவர்களே டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
ஹால் டிக்கெட் எடுத்துவரும் மாணவர்களை யாரும் தேர்வெழுத அனுமதிக்காமல் இருக்க முடியாது. பல மாணவர்கள், லேப்டாப் உள்பட சில பயன்களுக்காக, பள்ளிக்கு வருகின்றனர்.
அரையாண்டு தேர்வுக்கு மேல், அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. அதுபோன்ற மாணவர்களே ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment