Monday, March 6, 2017

மொழிப்பாட தேர்வுகள் ’ஈஸி’: மாணவர்கள் உற்சாகம்!

கோவையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த, மொழிப் பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வில், 380 பேர் ஆப்சென்ட் ஆனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில், 346 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 38 ஆயிரத்து 218 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் தேர்வு எழுத, 95 நோடல் மையங்கள் அமைக்கப்பட்டன. 

மேலும், 20 கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, 22 வழித்தட அதிகாரிகள் மூலம், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்போடு, நோடல் மையங்களுக்கு, நேற்று வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன.

மொழிப்பாடங்களான, தமிழ், மலையாளம், பிரெஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மன் உள்ளிட்ட, ஆறு பாடங்களில், இரண்டாம் தாள் தேர்வுகள், நேற்று நடந்தன. காலை, 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம், 1:15 மணிக்கு நிறைவடைந்தது. 

இதில், 1,800 அறை கண்காணிப்பாளர்கள், 303 பறக்கும் படை குழுவினர், பொதுத்தேர்வு பணிகளை பார்வையிட்டனர். அனைத்து மையங்களிலும், எவ்வித புகாரும் இன்றி, மொழிப்பாட தேர்வுகள், நடந்து முடிந்தன. தனித்தேர்வர்கள் உட்பட, அனைத்து மொழிப்பாட தேர்வுகளையும் சேர்த்து, 380 பேர், ’ஆப்சென்ட்’ ஆனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்பது மதிப்பெண்களுக்காக நடந்த, மொழிப்பாடங்களுக்கான இரண்டாம்தாள் தேர்வு, ஈஸியாக இருந்ததாக, மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இதனால், மொழிப்பாடங்களில், தோல்வி விகிதம் குறைய, அதிக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரிபின், புனித மைக்கேல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி:தமிழ் முதல்தாளைக் காட்டிலும், இரண்டாம் தாள் மிக எளிமையாக இருந்தது. உரைநடை, செய்யுள், ஒரு மதிப்பெண் என அனைத்து பகுதிகளிலும், புளூ பிரிண்ட் படி, கேள்விகள் இடம்பெற்றன. வினாத்தாள் பார்த்ததும் உற்சாகமாக எழுத துவங்கினேன்.

ேஷால்பி, ேஹாலி பேமிலி மெட்ரிக் பள்ளி:பிரெஞ்சு மொழிப்பாடம், எப்போதும் ஈஸியாக தான் இருக்கும். பொதுத்தேர்வுக்கு எதிர்பார்த்ததை விட, கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. சிறப்பாக தேர்வு எழுதியதால், மன நிறைவாக உள்ளது.

சனோபா, ேஹாலி பேமிலி மெட்ரிக் பள்ளி:பிரெஞ்சு பாட தேர்வில், இலக்கணம், பொருத்துக, ஒரு மதிப்பெண் வினாக்கள், சற்று கடினமாக இருக்கும். ஒரே மாதிரியான பொருள் தரும், இரு விடைகளை ’ஆப்ஷனில்’ கொடுத்து, குழப்பிவிடுவர். ஆனால், பொதுத்தேர்வு எதிர்பார்த்த அளவுக்கு கடினமாக இல்லை. கடிதம் எழுதுதல் பகுதி கூட, புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தது.

அழகுலட்சுமி, துணிவணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி:

தமிழ் பாடத்தில், இரு தாள் தேர்வுகளும் மிக எளிமையாக இருந்தன. திருக்குறள், மனப்பாட பகுதிகள் கூட, எளிதாக எழுதும் அளவுக்கு, கேள்விகள் இடம்பெற்றன. உரைநடை, துணைப்பாடம், மொழிப்பெயர்ப்பு பகுதிகளில், முழு மதிப்பெண்கள் அள்ளலாம்.

No comments:

Post a Comment