பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான ஆன்-லைன் பதிவுகளை,நடப்பாண்டிலும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பதிவு செய்கின்றனர். இதன் மூலம், கல்வித்தகுதிக்கு ஏற்ற, அரசுப்பணிகளும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல், மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், வேலைவாய்ப்புக்கான பதிவுகளை தங்கள் பயின்ற பள்ளிகளிலேயே, ஆன்-லைனில் பதிவு செய்து, அடையாள அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திட்டம் தொடர்ந்து, 2015ம் கல்வியாண்டு வரை செயல் படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களும் சிரமமின்றி வேலைவாய்ப்பினை பதிவு செய்தனர்.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் இதே முறையில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, நடப்பாண்டில் மார்ச், ஏப்., மாதத்தில் நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் கல்வி தகுதியை, அவர்கள் பயின்ற பள்ளிகளில் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்பு, நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து, 15 நாட்களுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த தேர்வர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாகவும் வழங்கப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தவிர, நடப்பாண்டில் மாணவர்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment