பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை தேர்வர் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது
.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ம் தேதி துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதை தடுக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து தேர்வர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன்புதான் பிரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, தேர்வர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு துவங்கும் நேரம் முதல், தேர்வு முடியும் வரை, நிமிடத்துக்கு நிமிடம், இயக்குனரின் உத்தரவை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: தேர்வு நாளன்று காலை, 9.45 மணிக்கு, தேர்வர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9.50 மணிக்கு, தேர்வர்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9.55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை தேர்வர்களிடம் காண்பித்து, இரு தேர்வரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்பே, வினாத்தாள் கட்டினை பிரிக்க வேண்டும்.
காலை, 10 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். காலை, 10.10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்படும். 10.15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின், 1.10மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு,மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment