Sunday, April 5, 2015

கல்வி துறை அதிரடி திட்டம் 'ஆன் - லைனில்' விடைத்தாள் நகல்:


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக, கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கூடுதல் வசதியாக,மாணவ, மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரைநடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது.
இன்று அல்லது நாளைக்குள் எந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, அதற்குரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்து விடும்.
பின்னர் அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கும் இதுகுறித்து தகவல் அனுப்புவார்.6-ந்தேதி முதல் பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. மதிப்பீடு செய்யும் பணி 13-ந்தேதி முடிவடைய இருக்கிறது.அதன்பின்னர் மதிப்பெண்கள் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு, மே முதல் வாரத்தில் கடந்த ஆண்டு போல் தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.மாணவர்கள் நலன் கருதி, முடிந்தால் முன்கூட்டியே முடிவை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர்களுக்கு இணையதளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை

பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிகக் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. வினாக்களில் எந்தப் பிழைகளும் இல்லை என்பதால் கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற விலங்கியல், தாவரவியல் பிரிவுகளையும் சேர்த்து 30 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானவைதான். ஆனால், எம்.பி.பி.எஸ். அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்று, தசைச் சிதைவு நோய்க்கான காரணங்கள், நாடித் துடிப்பு குறைவதற்கான காரணங்கள் போன்ற கடினமான கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. புத்தகம் முழுவதும் படித்த மாணவர்கள் கூட விலங்கியல் பிரிவில் 75-க்கு 50 அல்லது 60 மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விலங்கியல் பிரிவில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த வினாத்தாள்களிலிருந்து 5 மதிப்பெண் அளவுக்கே கேள்விகள் பொதுத்தேர்வில் வந்துள்ளன. எனவே, விடைத்தாள் திருத்துவதில் சற்றுத் தாராளமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவு கடினமாக இருந்தாலும், தாவரவியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன
பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் ஜாதிச்சான்று வழங்க ஏற்பாடு
திண்டுக்கல்:பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடுசெய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்றசான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர். ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்கவருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை பெற்று கொள்ளலாம். ஏற்கனவே சான்று பெற்றோர் அதன் நகல்களைபெறலாம். மேலும் மெய்த்தன்மை குறித்து சந்தேகம் ஏற்படாத வகையில் சான்றுகளில்ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்
எந்த படிப்பு சம்பளத்தை அள்ளிக் கொட்டும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை
"உயர் கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனைகள் வழங்கினார்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் எந்த துறைகளில் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஆலோசித்து அத்துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும். குறிப்பாக, ஒரு கம்பெனியில் ஊழியர் ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கினால் அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வருவாயை அந்நிறுவனம் எதிர்பார்க்கும். இதன் அடிப்படையில் தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் சார்ந்த துறையில் எதிர்கால வளர்ச்சி இருந்தால் தான் இது சாத்தியம் ஆகும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் வேளாண்மை, மின்சாரம், உள்கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ., சிவில் பிரிவுகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். 87 சதவீதம் பொறியியல் மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதையடுத்து மெக்கானிக் இன்ஜி., படிப்பை தேர்வு செய்யலாம். 4 சதவீதம் பெண்கள் தான் இப்படிப்பை தேர்வு செய்கின்றனர். இதனால் இப்பிரிவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன. தேவையான 'கட்ஆப்' மதிப்பெண்கள் இருந்தால் மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம். கிடைக்காதபட்சத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை தொடர்பான படிப்புகளை தேர்வு செய்யலாம். இதற்கு அடுத்து, கால்நடை படிப்பிற்கும், பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம். தற்போது பி.டெக்., (பால்வளம் தொழில் நுட்பம்), கோழி வளர்ப்பு பற்றிய படிப்புகள் முடித்தால் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. கலைப் பிரிவுகளில் பி.ஏ., பொருளியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்பின் சட்டப் படிப்பை தேர்வு செய்யலாம். 2018 ம் ஆண்டில் வக்கீல்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். சட்டப் படிப்பு முடித்தால் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர் பணிகள் காத்திருக்கின்றன. பி.டெக்., கட்டடக் கலை, பி.எஸ்சி., பாரஸ்டிரி படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்
பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!
'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன.
பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கி, மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தபோதுதான் பிட் அடித்த மாணவர்கள் பிடிபட்டனர்.
இதில் தமிழ் பாடம் முதல் தாளில் 5 மாணவர்கள் பிடிப்பட்டனர். அதுபோல், தமிழ் இரண்டாம் தாளில் 11 பேர் பிடிப்பட்டுள்ளனர். ஆங்கிலம் முதல் தாளில் 36 பேர், இரண்டாம் தாளில் 15 பேர், கணக்கில் 20 பேர், இயற்பியல், வணிகவியல் பாடத்தில் 46 பேர், வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தில் 67 பேர், பொருளாதாரத்தில் 63 பேர், உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் 33 பேர், கணக்கு பாடத்தில் 50 பேர் பிட் அடித்து பிடிப்பட்டுள்ளனர். மொத்தத்தில் காப்பி அடித்தது, பிட் அடித்தது போன்ற செயல்களில் மொத்தம் 356 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர் மாவட்டத்தில் 81 பேரும், வேலூர் மாவட்டத்தில் 81 பேர் என்று பிட் அடித்து மாட்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த இரு மாவட்டங்களும் இந்த ஆண்டு முதலிடத்தை பெற்றிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பிட் அடித்து மாட்டி 2வது இடத்தை பிடித்துள்ளது

Thursday, April 2, 2015

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு
தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்துதான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர்தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத்திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச் 21ம் தேதி செய்தி வெளியானது.
வினாக்கள் குளறுபடி
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம் 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 1, 2015

 பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப். 6 முதல் புத்தகங்கள்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.
அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.
பத்தாம் வகுப்புக்கான புத்தகங்களும் மாவட்டங்களுக்கு பெரும்பாலும் அனுப்பப்பட்டு விட்டன. 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்ததும் இந்த மாணவர்களுக்கான புத்தகங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.
இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.
வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு
பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகைகேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாககேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக 10வது கேள்வியில் யுரேனியம் அணுத்துகள், ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியாகும் ஆல்பா, பீட்டா கதிர்கள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்டு இருந் தது. அதில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்கு பதிலாக 108 என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. அதனால் அந்த கேள்வியின் விடைக்கு சரியான கணக்கீடு கிடைக்காமல் மாணவர்கள் திணறினர்.
அதேபோல 22வது கேள்வியில் வெப்ப இயக்கவியல் தொடர்பாக கொடுக்கப்பட்ட விடையில் 0.032 என்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் தவறாக கொடுக்கப்பட்டு இருந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. வேதியியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10, 22வது கேள்விகளுக்கு விடை எழுத முற்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி
பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.இந்த தேர்வில் கணிதத்தேர்வில் ஒருகேள்வி குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்தக்கேள்வியில் கேட்பப்பட்டது மைனசா, பிளஸா என்று தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.
அதுபோல வேதியியல் தேர்வில் 10-வது கேள்வியும் சரியாக கேட்கப்படவில்லை. 22-வது கேள்வியில் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் சரி இல்லை. மேலும் பொருளாதார தேர்வில் 78-வது கேள்வி 20 மதிப்பெண்ணுக்கு உரியது.அந்த கேள்வி பற்றியும் பிரச்சினை கிளப்பப்பட்டது. எனவே பிளஸ்-2 கணிததேர்வு, வேதியியல் தேர்வு, பொருளாதார தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளில் எந்த தேர்வுக்கு? எத்தனை கருணை மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில் அளிக்கையில் “ஒவ்வொரு பாடத்திற்குரிய தேர்வுக்கும் தனித்தனியாக சரியான விடை அளிப்பதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இன்னும் அறிக்கை தரவில்லை. அதனால் கருணை மதிப்பெண் போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!
'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன.
பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதியுள்ளனர். பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கி, மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு, அனைத்து தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்தபோதுதான் பிட் அடித்த மாணவர்கள் பிடிபட்டனர்.
இதில் தமிழ் பாடம் முதல் தாளில் 5 மாணவர்கள் பிடிப்பட்டனர். அதுபோல், தமிழ் இரண்டாம் தாளில் 11 பேர் பிடிப்பட்டுள்ளனர். ஆங்கிலம் முதல் தாளில் 36 பேர், இரண்டாம் தாளில் 15 பேர், கணக்கில் 20 பேர், இயற்பியல், வணிகவியல் பாடத்தில் 46 பேர், வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தில் 67 பேர், பொருளாதாரத்தில் 63 பேர், உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் 33 பேர், கணக்கு பாடத்தில் 50 பேர் பிட் அடித்து பிடிப்பட்டுள்ளனர். மொத்தத்தில் காப்பி அடித்தது, பிட் அடித்தது போன்ற செயல்களில் மொத்தம் 356 பேர் பிடிப்பட்டுள்ளனர்.
இதில் கடலூர் மாவட்டத்தில் 81 பேரும், வேலூர் மாவட்டத்தில் 81 பேர் என்று பிட் அடித்து மாட்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த இரு மாவட்டங்களும் இந்த ஆண்டு முதலிடத்தை பெற்றிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேர் பிட் அடித்து மாட்டி 2வது இடத்தை பிடித்துள்ளது.