Saturday, May 23, 2015

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்


பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. வெறும் 124 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர். உயிரியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இந்த விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதிக்கப்படும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அடுத்த வாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களே விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகிய முடிவுகள் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறு கூட்டல், மறு மதிப்பெண்ணுக்குப் பிறகு மதிப்பெண்ணில் மாறுதல் இருந்தால் அவை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத் தக்கதாக இருக்கும் என்பதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் சற்றுத் தாமதமாக வழங்கப்படுகிறது.

Friday, May 15, 2015

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்


பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், மாற்றுச் சான்றிதழும் நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. தற்காலிக சான்றிதழில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தேர்வுப் பதிவு எண், பயிற்று மொழி, பள்ளியின் பெயர், பாடப்பிரிவின் பெயர், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் தனித்தனி மதிப்பெண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சான்றிதழ் எண் பதிவிட வேண்டிய இடத்தில், 'டி.எம்.ஆர்., கோட்' எனப்படும், மதிப்பெண் பதிவேடு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த சான்றிதழ் மூலம், சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வேலைவாய்ப்பு பதிவுக்கு சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை பதிவு செய்யும் போதோ அல்லது அவரது படிப்பை, 'அப்டேட்' செய்யும்போதோ, மதிப்பெண் சான்றிதழ் எண்ணை, 'ஆன் - லைனில்' கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், 'டி.எம்.ஆர்., கோட்' எண் மட்டுமே உள்ளது; சான்றிதழ் எண் இல்லை. அதனால், அசல் மதிப்பெண் சான்றிதழ் எண் வந்த பின், வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும், என்றார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்


பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.8.8 லட்சம் மாணவர்கள்:
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டனர்.இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு, முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன்படி, அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மே 14-ஆம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு,தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வரும் நாள்களிலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் எப்போது?
நடப்பாண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன.எனினும், பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் கிடைத்த பிறகு, அனைத்து மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்! : புதியதிட்டத்துக்கு பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்பு


பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு, மாநில அளவில் தற்காலிகமதிப்பெண் சான்றிதழ், பள்ளிகள் வாயிலாக, நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. முதன்முறை செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு, ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கடந்த, 7ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், உயர்கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், மாணவர்கள் கல்லுாரிகள் தேர்வு செய்வதில் எவ்வித சிக்கல்களும்,தாமதமும் எழாத வகையில், முதல் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் அரசு தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில், காலை, 9:30 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் பணி நடந்தது. இத்துடன், மாணவர்களின், பள்ளி மாற்றுச்சான்றிதழ்களையும் வழங்க அரசுத்தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் முறையாக வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், மாணவரின் புகைப்படம், மதிப்பெண் விபரம், பயிற்று மொழி, பிறந்த தேதி, பதிவு எண், பாட தொகுப்பு எண்,பள்ளியின் பெயர், தேர்வு முடிவுகள் வெளியானது முதல் எத்தனை நாட்கள் செல்லும் என்ற விபரங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளன.மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், உடனடியாக தலைமையாசிரியரே பிழைகளில் திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு வழங்கவும், அப்பிழைகள் குறித்து அரசு தேர்வுத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அசல் மதிப்பெண் பட்டியலில், 100 சதவீத பிழைகள் தவிர்க்கப்படும்.அரசு பள்ளி தலைமையாசிரியை சந்திரசேகர் கூறுகையில்,''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திட்டம் நல்ல முயற்சி. உயர்கல்வியில் மாணவர்கள் எவ்வித தாமதமும்இல்லாமல் சேரலாம். அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.

Saturday, May 9, 2015

பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது

.
தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் முதல் நாளான வெள்ளிக்கிழமையே விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுக்கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும். வரும் 14-ஆம் தேதி வரை விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டண விவரம்: விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு ரூ. 275-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்

Wednesday, May 6, 2015

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.தேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும் மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில்தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு ஒரு அறிக்கையில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
ப்ளஸ் 2 தேர்வு - நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்.
*மே 8 முதல் 14வரை மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம்.அப்போது வழங்கும் ஒப்புகை சீட்டு பத்திரமாய் வைத்திருக்கவும்
*தற்காலிக மதிப்பெண் சான்று மே 14.மே 18முதல் தேர்வு துறை இணையத்தில் பெறலாம்
*ஜுன் இறுதியில் தனித்தேர்வு.மே 15முதல் 20வரை விண்ணப்பிக்கலாம்

Saturday, May 2, 2015

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து, பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவு வெளியானதும், மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது. கல்லூரிகளில் உள்ள, 'புரவிஷனல்' சான்றிதழ் போல், இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், உயர் கல்வியில் சேர்வதற்கான அத்தாட்சியாக இருக்கும். இந்த சான்றிதழை எப்படிப் பெறுவது என்பது குறித்த அரசாணையை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா பிறப்பித்து உள்ளார். அதில், 'தேர்வு முடிவு கள் வெளியானதும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தேர்வுத் துறையின், http://www.dge.tn.nic.in/ என்ற இணைய தளத்தில் பள்ளிகள் மூலம், முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின், மாணவ, மாணவியர் தங்கள் தேவைக்கேற்ப பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்' எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சான்றிதழ்களை, கல்லூரி படிப்பில் சேர பயன்படுத்திக் கொள்ள அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையின் நகல்கள் அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.